அன்புள்ள அண்ணா...
எட்டாத தொலைவிருந்து எழுதுகிறேன்,
எட்டிவிடும் உன் கரத்தை
கிட்டாத என் ஆசைகளென..!
சோலைக் குயில்களாய் தானிருந்தோம்சோகமறியா வாழ்ந்திருந்தோம்…
சொந்தங்களின் சோகமே தாகமாக
தேசத்தின் மீட்சியே
நோக்கமாகவீட்டுக்காய் உனைவிட்டு
நாட்டுக்காய் நான் புகுந்தேன்...!
ஆண்டுகள் ஆக ஆக என் வட்டம் பெரிதானது...
ஒரு தாயோடிருந்தவன்
ஓராயிரம் தாய்களுக்கு மகனானேன்...!
சின்ன குடும்பத்துள் சிறகடித்தவன்
சிந்திடும் கண்ணீருக்கு மருந்தானேன்..!
நேரம் வந்துவிட்டது...
கலங்கடிக்கும் காலனை கலங்கடிக்க போகிறோம்...
விலங்கான எம்மவரின் விலங்கொடிக்கப் புறப்பட்டோம்...
பிரியமான உறவுகளின் பிரிவின் வலியை
விடபிரியமானவர்களுக்கு பிரியமான
உரிமைக்காய் பிரியும் சுகமதிகம்...!
அண்ணா..
தேசத்தின் கடமையை நான் செய்வேன்என்-
தேகத்தை பிரசவித்தவளை பார்த்துக் கொள்...
கருவறையில் சுமந்தவளை ஒருமுறைவிமானத்தில் சுமந்து செல்...
தோள்மீது சுமந்த தந்தையை
சொகுசு கார்மீது ஏற்றி பவனி வா...
கூடப்பிறந்தவளின் குழந்தை தூக்கிகுள்ளமாமனிவன் பேர்சொல்லி முத்தமிடு...
காத்திருக்கும் என்னவளுக்கு சொல்-
மீண்டு வந்தால் கட்டிக் கொள்வேன்,
மாண்டுபோனால் வாழ்த்திசைப்பேன் - வாழச் சொல்...!
கூடவே கூத்தடித்த கூட்டாளிகளை கவனித்துக் கொள்,
வாழ்ந்த காலத்தை வசந்தமாக்கியவர்கள் அவர்கள்...
இவை என் ஆணைகளல்ல-
மிச்சமுள்ள கனவுகள்...!
போகிறேன் தேசத்தின் கனவுக்காய்…
என் கனவை-
நீ சுமப்பாயென்ற நம்பிக்கையுடன்.
-அன்புடன் தம்பி.